நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும், அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.
அதேபோல் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
நாடு தொடர்ந்து வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பையும், அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளேன். பொது மக்கள் அமைதியான முறையிலும், சிறந்த சிந்தனையுடனும் செயற்பட வேண்டும் என்பதை பொறுப்புடன் வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்;ந்து வலியுறுத்தினார்கள். குறித்த யோசனைகளுக்கு அமைய கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பல தீர்மானங்களை முன்னெடுத்தேன்.
அதற்கமைய கடந்த மாதம் ராஜபக்ஷர்கள் இல்லாத இளைஞர்களை உள்ளடக்கிய தற்காலிக அமைச்சரவையை ஸ்தாபித்தேன். அத்துடன் பிரதமரை நீக்கி புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க இணக்கம் தெரிவித்தேன்.
இவ்வாறான பின்னணியில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராத அசம்பாவிதம் இடம்பெற்றதை தொடர்ந்து நாடுதழுவிய ரீதியில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதால் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
குறுகிய நேரத்திற்குள் பலர் உயிரிழக்கும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையானது.
இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி பேதமற்ற வகையில் கண்டனம் வெளியிட்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தேன்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானங்களை செயற்படுத்துமாறு முப்படையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். போராட்டங்களை தூண்டிவிடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையினை தொடர்ந்து பேணுவதற்கு சகல கட்சிகளை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளேன். அரச கட்டமைப்பை முன்கொண்டு செல்வதற்கும் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளேன்.
அதேபோல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய செயற்திட்டத்தை வழங்கி நாட்டை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment