இன்று திருகோணமலை கடற்பரப்பில் இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக மீன்பிடி படகில் பயணித்த, ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 7 பேர் உட்பட 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல்காரர்கள் நீண்ட தூர பயணங்களுக்கு பொருத்தமற்ற மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதாகவும், இந்த படகுகளில் பயணிக்க முயற்சிப்பது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.
சட்டவிரோதமாக படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பான பல தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
இந்த வருடத்தில் இதுவரை படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைய முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 250 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மனித கடத்தலுக்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் 7 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும், படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment