எனவே போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சிவில் சமூகப்பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதியின் அவசரகாலநிலை பிரகடனத்திற்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளமையானது நிறைவேற்றதிகாரமும், சட்டவாக்கமும் தற்போது அடக்குமுறைப்பாதையில் செல்வதையே காண்பிக்கின்றது.
அமைதிவழி போராட்டக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன், அமாலினி டி சேரா, பவானி பொன்சேகா, தில்ருக்ஷி ஹந்துனெத்தி, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரிட்டோ பெர்னாண்டோ, கலாநிதி ஜெஹான் பெரேரா உள்ளிட்ட 222 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், தேசிய சமாதானப்பேரவை, சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட 70 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுதமேந்தாது அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் பழிவாங்கல்கள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளிலுமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
போராட்டக்காரர்களைக் கடத்துதல், கைது செய்தல், அச்சுறுத்துதல் மற்றும் அடக்கியொடுக்குதல் உள்ளடங்கலாக மனதிற்கு சஞ்சலமேற்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகத் தீவிரமடைந்துவரும் போக்கு தொடர்பில் நாம் அதீத கரிசனை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமும், ஊழல் மோசடிகளுமே எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் பற்றாக்குறை உள்ளடங்கலாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டமைக்குப் பிரதான காரணம் என்பதை பொதுமக்கள் பலரும் புரிந்துகொண்டதன் விளைவாகவே கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அமைதிவழியிலான கருத்து வெளிப்பாடு அவசியம் என்பதுடன், தற்போதைய நெருக்கடிநிலையில் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் இது இன்றியமையாததாகும் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment