இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தானின் பந்துவீச்சுகளை ஆரம்பத்தில் எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8), தனுஷ்க குணதிலக்க (1), தனஞ்சய டி சில்வா (28), தசுன் ஷானக்க (2) ஆகியோர் முதல் 9 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 1 சிக்ஸருடன் 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடரில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய பானுக்க ராஜபக்ஷ 45 பந்துளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
எட்டு வருடங்களுக்கு முன்னர் இருபது 20 ஆசிய கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை இலங்கை அணி சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment