Ads (728x90)

 

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று விசேட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னணி தனியார் நிறுவனமொன்றின் பொது முகாமையாளரான உதுல சாரங்க ரணவீர என்பவரால் இந்த விசேட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தொழில் வல்லுநர்களுக்கும், நாட்டின் சாதாரண மக்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்படும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்டமூலத்தில் உள்ள 15, 16, 22, 29, 36 மற்றும் 39 ஆகிய உறுப்புரைகளை நீக்க வேண்டும் அல்லது அவை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை உத்தேச வரித் திருத்தங்களை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் அதிக தொகையை மாதாந்த வருமானமாக பெறுவோரிடம் 6%  முதல் 36% வரியை அறிவிடுவதற்கு வழிவகுத்துள்ள உத்தேச வருமான வரி திருத்த சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஒக்டோபர் முதலாம் திகதி புதிய வருமான வரி திருத்தத்திற்கு அமைய வரி அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget