வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் கொழும்பின் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு முன்பாக அவ்விடத்தில் ஒன்றுகூடியதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்களில் ஏறி தும்முல்ல சந்திக்கு அருகிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக முப்பது நிமிடங்கள் வரை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையிலிருந்து பம்பலப்பிட்டி வரை சென்றதுடன், அங்கிருந்து கொள்ளுப்பிட்டிக்கு பேரணியாக சென்றனர்.
இதேநேரம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மற்றொரு குழுவினர் நாரஹேன்பிட்டியிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் பேரணியாக பொரளைக்கு சென்றனர்.
இரண்டு இடங்களிலிருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணி கொழும்பின் வெவ்வேறு வீதிக்கு ஊடாக பயணித்தது.
இந்நிலையில் ஒரு தரப்பினருக்கு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்திற்கு சென்றனர்.
நாரஹேன்பிட்டியிலிருந்து பேரணியை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment