Ads (728x90)

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் தெரிவுக் குழு அமைத்து நிதியை செலவு செய்யாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த பிராந்தியங்களின் ஒன்றிய தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம்  இயற்றப்பட்ட காலத்தில் இருந்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஆரம்பமானது. படிப்படியாக இனப்பிரச்சினை இறுதியில் 30 வருட கால யுத்தத்தை தோற்றுவித்தது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர அரசாங்கம் கடன் பெற்று கடன் சுமையை அதிகரித்தது. இதனால் இன்று முழு நாடும் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

நியாயமான தீர்வு ஊடாகவே நிலையான தீர்வு காண முடியும். தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிக நிதி செலவிடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது இன்றும் இருக்கிறது. 

75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தான் அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அதனை நாங்களும் எதிர்பார்த்துள்ளோம். விட்டுக் கொடுப்புடன் அரசாங்கமும் செயற்பட வேண்டும் .

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் ஒன்றிணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வு அவசியம். இதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget