பொதுமக்களுக்கான சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாது.
அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச அதிகாரிகள் திறமையாக செயல்பட வேண்டும். எனக்கு காரணங்கள் தேவையில்லை. அரச திணைக்களங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட வழியில்லை. அரசாங்கம் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
பெருந்தோட்டத் துறையில் சில அதிகாரிகள் சட்டக் கோவைகளை கேடயமாக வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.
இப்பிரதேசத்திலுள்ள கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியபோது, ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிடப்பட்டது. ஆசிரியர் நியமனங்களைப் பெற்று, ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே நியமனம் பெற்று ஐந்து வருடங்களுக்கு இடமாற்றங்களை வழங்காமை தொடர்பில் கல்வியமைச்சும், மாகாண சபையும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
பதுளை மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக மஹியங்கனை பிரதேச வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கான பணிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும்.
பதுளை பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு அவசியமான அனைத்து காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment