Ads (728x90)

போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் தீர்ப்பிலேயே உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சுமார் 2 வருடங்களாக இடம்பற்ற விசாரணைகளின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

இந்த நட்டஈடுகளை அறவிட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக 6 மாதங்களுக்குள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த விடயங்களை மேற்பார்வையிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget