Ads (728x90)

நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டாம் என நிதியமைச்சு அறிவித்திருந்த போதிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியன போனஸ் வழங்கியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் விளக்கம் கோரியுள்ளார். 

அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு முரணாக போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மேற்படி இரண்டு நிறுவனங்களினதும் தலைவர்களிடம் விளக்கம் கோரியுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு மாத சம்பளத்தை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு இலட்சம்  ரூபா வீதம் போனஸ் வழங்கியுள்ளதாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபமடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 120 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாத்திரம் 4,200 சேவையாளர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு இரு மாத சம்பளம் உபகார கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது. மாதம் 5 இலட்சம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 10 இலட்சம் ரூபா அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் 5,800 சேவையாளர்கள் உள்ளார்கள் இவர்களுக்கு ஒரு இலட்சம் அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக 58 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களுக்கான உபகார கொடுப்பனவு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு முரணாக நட்டமடையும் நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை உரிய நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget