Ads (728x90)

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்  தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான 07 பேருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட 07 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்ததோடு மே மாதம் 08 திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.

தென்னிலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் மீது பொலிசார் நடவடிக்கையெடுப்பதில்லை. மாறாக வடக்கில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடும் இந்து மதகுரு வேலன் சுவாமிகள் மீது அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

07 பேர் மீதும் பொலிசார் தாக்கல் செய்த பி அறிக்கையில், உள்ளூராட்சி சட்டவிதிகள் 81, 81 பி இன் கீழ் இவ்வாறான ஊர்வலங்கள், கூட்டங்களை நடத்த முடியாது. இந்த போராட்டத்தினால் பொதுமக்களிற்கு அசௌகரியம் ஏற்பட்டது. பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 15வது பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என ஒலிபெருக்கியில் அறிவித்தோம். இந்த போராட்டத்தால் பொதுமக்களிற்கு இழப்பு ஏற்பட்டு அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என  குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பொலிசார் குறிப்பிட்டதை போல சட்ட ஏற்பாடுகள் இல்லை. உள்ளூராட்சி சட்டவிதிகள் 81, 81 பி இன் கீழ் வரும் சம்பவங்கள் தேர்தலுடன் தொடர்புடையவை. ஆனால் இது தேர்தலுடன் தொடர்புடைய ஒரு பேரணியல்ல. ஆகவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தெற்கில் எத்தனையே போராட்டங்கள் நடக்கின்றன. அதில் பௌத்த பிக்குகள் கலந்து கொள்கிறார்கள். பொலிசார் அதை கண்டுகொள்வதில்லை. அண்மையில் பௌத்த பிக்குகளால் 13வது திருத்தம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பொலிசார் கவலைப்படும் முதல் சந்தர்ப்பம் இது. ஆனால் பொலிசாருக்கு எதிராகத்தான் அடிப்படை மனித உரிமை ஆணை உருவானது. பொலிசார் அரசாங்கத்திற்கு எதிராகத்தான் மனித உரிமை மீறல் வழக்கு பதிவு செய்யலாம் என்றார்.

போராட்டத்தால் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் யாராவது முறைப்பாடு செய்தனரா? என நீதவான் ஆனந்தராஜா பொலிசாரிடம் கேட்டார். பொலிசார் இல்லையென்றனர். இதனையடுத்து பிரதிவாதிகளிற்கு பிணை வழங்குவதாக நீதவான் அறிவித்தார்.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, என்.சிறிகாந்தா ஆகியோர் இந்த வழக்கை தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு பொலிசாரை அறுவுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து வழக்கை தொடர்வதா? இல்லையா?என்பது பற்றி சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget