Ads (728x90)

தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல தொகுதி வேட்பாளர் நிமல் அமரசிறி  இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பில் திங்கட்கிழமை தேசிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ,

அமைதியான முறையில் எம்மால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது காயமடைந்த 28 பேரில் பலர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகக் காணப்பட்ட நிலையிலேயே அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களது உயிருடன் விளையாடுவது பாரதூரமானதாகும். இவ்வாறு இழக்கப்பட்ட உயிருக்கான பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

மக்களின் உரிமையான தேர்தலைக் கோரியே நாம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். மாறாக பொலிஸாருடன் மோதுவதற்காக அல்ல.

எமது உரிமைகள் மீறப்படும் போது நாம் அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். இதன் காரணமாகவே எம்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் இதுபோன்ற தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு இனினும் இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget