Ads (728x90)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி, நிதி அமைச்சினால் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரச அச்சகத்தினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் போதுமான அளவு எரிபொருள் வழங்கப்படாமை, பொலிஸ் திணைக்களத்தினால் அரச அச்சகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ள போதிலும், அதனை நிறைவேற்ற முடியாதவாறு ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி எதிர்த்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ளது. அதேவேளை தமக்கான நிதி வழங்கப்படும் வரை வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என்று அரச அச்சகம் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழு மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget