Ads (728x90)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் தலையிட்டு வருகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அவர்கள் எதிர்பார்க்கும் தேர்தல் வரும் வரை இந்த தேர்தலை பிற்போடுவதற்குமே அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம்.  வரையறைகளை அமைத்து அதற்கமைய மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுகிறது. இதனுடன் இணைந்ததாகவே தேர்தல் மீளாய்வுக்குழு இருக்கிறது. 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை. தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை.

தேர்தல் பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதற்கு  இடமளிக்காவிட்டால், இதனால் ஏற்படும் பெறுபேறு இதனை விட மோசமானதாக இருக்கும் என்பதை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மக்களின் நிலைப்பாட்டை அமைச்சரவையின் தீர்மானம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நினைக்குமாயின் அது அரசாங்கத்தின் முட்டாள்தனமாகும்.

பெப்ரல் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget