ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறுவோரிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
புதிய வரித்திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தமது கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அரசாங்கத்தால் அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. பெற்றோலிய, மின்சக்தி, துறைமுகம், ரயில்வே, ஆசிரியர் மற்றும் தபால் சேவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த துறைமுக தொழிற்சங்கங்கள் , பகல் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பில் ஈடுபட்டன.
தொழில்முறை தொழிற்சங்க ஒன்றியத்தின் பங்குதாரரான இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஊழியர்களும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முற்பகல் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.
சுகாதார தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது.
கம்பளை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள், வைத்தியர்கள் , ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்திலிருந்து கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதி வரை பேரணியாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
பாடசாலை ஆசிரியர்கள் கறுப்பு பட்டியணிந்து பணிக்கு சமூகமளித்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து கொட்டாவையில் மாலை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இரத்மலானை தலைமை அலுவலகத்தில் இருந்து சொய்சாபுர வரை காலை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை ரயில்வே தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment