Ads (728x90)

கடன் மறுசீரமைப்பு செயல்முறை பற்றி நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சகல நாடுகளையும் விட நமது நாடு கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை வேகமாக பூரத்தி செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது முற்றிலும் தவறான கருத்தாகும். எமது நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. செயல்முறையை முழுமைப்படுத்தாமல் இவ்வாறு பட்ட பொய்யை மக்களிடம் சொல்வது தவறாகும். எம்மை விட வேகமாக தங்கள் கடனை மறுசீரமைப்புச் செயல்முறையை முழுமையாக மறுகட்டமைத்த பல நாடுகள் உள்ளன.

கானா போன்ற நாடு முன்னெடுத்த விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் அந்நாட்டின் மொத்த கடனில் 37% குறைப்பை செய்து கொள்ள முடிந்துள்ளது.

கானா நிதி அமைச்சர் தனிப்பட்ட முறையில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுதான், கானா நாடு எமது நாட்டை விட வேகமாக ஒரு விரிவான ஒப்பந்தத்தில் நுழைந்ததற்கு வழிவகுத்த காரணமாகும். எமது நாட்டின் நிதியமைச்சர் அவ்வாறான கலந்துரையாடலுக்குச் செல்லவில்லை. இதனால் அரசாங்கம் பொய்யுரைத்து வருகிறது.

ஒரு நாடாக நாம் ஒரு முழுமையான இணக்கப்பாட்டை எட்டவில்லை. சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்கலாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை. இந்த கலந்துரையாடல்கள் ஜூலை 3 ஆம் திகதி வரை தொடர்கிறது.

இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், எமது நாட்டுக்கு எதிராக வழக்குத் தொடரவும் குறித்த தரப்பினர் தயார் நிலையில் உள்ளனர்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 265 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்தறை புளத்சிங்கள மதுராவல ரெமுன மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget