நேற்று பி.ப 2 மணிக்கு மறைந்த இரா. சம்பந்தனின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்த போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கௌரவ தினேஷ் குணவர்தன, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்பட்டது.
பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் முன்னணியாகக் கொண்டு பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதனை அடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பிரமுகர்கள் அனைவரும் இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் குறிப்பையும் பதிவு செய்தனர்.
இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று 04ஆம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் காலை 09 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
Post a Comment