Ads (728x90)

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர் சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களுடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசிய விடயங்களை சுமந்திரன் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

மூன்று பிரதான வேட்பாளர்களும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதாகக் கூறியிருக்கும் நிலையில், அதில் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் விடயங்களை அமுல்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரிடம் கையளித்த ஆவணம், 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கையளித்த ஆவணம் என்பன பற்றி உயர்ஸ்தானிகரிடம் சுமந்திரன் தெரிவித்தார், 

இவற்றில் நிர்வாகரீதியாகப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தற்போது வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாகவும், அது செயல்வடிவம் பெறுவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார். 

அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதால் இந்த பேரம் பேசலை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சிறந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைப்பவரை ஆதரிப்பது குறித்துத் தீர்மானிக்கமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget