Ads (728x90)

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி முகமது சகாபுதீன் பிறப்பித்துள்ளார். இவருடன் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் 5ம் திகதி வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார்.

ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவி காலிதா ஸியாவை உடனடியாக விடுதலை செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக பங்களாதேஷ் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த சந்திப்பில் இராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷேக் ஹசீனாவின் வலுவான எதிர்ப்பாளராகக் கருதப்படும் 78 வயதான காலிதா ஸியா நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவியாவார்.

மாணவர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களில் இந்த அறிவிப்புக்கள் வெளிவந்துள்ளது.

இரண்டு முறை பங்களாதேஷின் பிரதமராக இருந்த காலிதா ஸியா 2018 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அநாதை இல்லங்களுக்கு நன்கொடை என்ற பெயரில் 250,000 அமெரிக்க டொலர் மோசடி செய்ததன் மூலம் அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget