ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் மட்டுமாநகரசபை மேயர் சரவணபவன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவால் வாசிக்கப்பட்டது.
இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.
எனவே 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் என்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காத நிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment