Ads (728x90)

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கடந்த 27 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

158 வருட பொலிஸ் வரலாற்றில் கான்ஸ்டபிளாக  சேவையில் இணைந்து கொண்டவர்கள் வரிசையில் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுகொண்டிருக்கும் ஒரே அதிகாரி பிரியந்த வீரசூரிய ஆவார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் பட்டம் பெற்ற அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் பொலிஸ் அதிகாரியாக பதவி நிலை உயர்வு பெற்றார். 

பொலிஸ் திணைக்களத்தில் முப்பத்தாறு வருட களங்கமற்ற சேவையை ஆற்றியுள்ள வீரசூரியவின் சேவையை பாராட்டி 10 பொலிஸ் மா அதிபர்கள் கடிதம் வழங்கியுள்ளமை இந்த நியமனத்தின் சிறப்பம்சமாகும். 

பொலிஸ் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், பொலிஸ் விநியோக பிரிவின் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள அவர், கிழக்கு தீமோர் மற்றும் ஹைட்டி இராஜ்ஜியத்தில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். 

பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுக்கொள்ளும் வேளையில் வீரசூரிய வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சேவையாற்றினார்.

மனித வள முகாமைத்துவம் தொடர்பிலான வர்த்தக நிர்வாக பட்டத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget