Ads (728x90)

நவராத்திரி விரதம் என்பது இந்துக்கள் சக்தியை அன்னையின் வடிவில் வழிபடும் விரதமாகும்.

நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்கள் சக்தியை வீரத்தின் வடிவமான துர்க்கையாகவும், செல்வத்தின் வடிவமான இலட்சுமியாகவும், கல்வியின் வடிவமான சரஸ்வதியாகவும் விரதமிருந்து வழிபடுவதாகும். 

பத்தாம் நாள் விஜயதசமி. அன்றைய தினம் ஏடு தொடக்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம். நவராத்திரியுடன் இணைந்ததாக 'கொலு வைத்தல்' முதலான பாரம்பரியங்களும் இடம்பெறும்.

நவராத்திரி விரத வழிபாடு புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை அனுஸ்டிக்கப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

பிரதமை தொடங்கி தசமி வரை ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

உலகத்தின் இயக்கத்திற்கு சக்தி தான் ஆதாரம். சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி விரதம். அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம். அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை. 

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் ஒதுக்கி ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம்.


Post a Comment

Recent News

Recent Posts Widget