ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும். சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விரதம் 2.11.2024 திகதி தொடங்குகிறது. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். காப்பு கட்டுபவர்களும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும். வரும் 8.11.2024 திகதி வரை விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
சஷ்டி விரதம் இருப்பதில் பல முறைகள் உள்ளன. ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது, ஒரு வேளை மட்டும் உணவை தவிர்த்து விரதம் இருப்பது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்த அல்லது அபிஷேகம் செய்த ஒரு டம்ளர் பாலை மட்டும் ஒரு நாளில் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது, பால், பழம் சாப்பிட்டு விரதம் இருப்பது, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பது என பல வகைகள் உண்டு. இவற்றில் தங்களுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்கலாம். அவரவரின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
Post a Comment