Ads (728x90)

இன்று காலை மத்திய, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கி.மீ  தொலைவில் தென்கிழக்கில்  நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் பயணிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகங்களுடன் கனமாக இருக்கும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தற்போது நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 208 குடும்பங்களைச் சேர்ந்த 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம்  உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது. 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலப்பரப்பு வெள்ள நீரில் அழிவடைவதைத் தடுக்க விவசாயிகள் மண்மூடைகளை அடுக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள் நீரில் மூழ்கி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

கன மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் வீதி எது கடல் எது என தெரியாத நிலையிலையே பயணிகள் பயணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 43 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 12,463 குடும்பங்களைச் சேர்ந்த 43,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget