இந்திய இராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த முகுந்த் வரதராஜன் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அன்று காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார்.
அவரின் சொந்த வாழ்க்கை மற்றும் இராணுவத்தில் அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றை அவரின் மனைவியான இந்து மூலமாக பார்வையாளர்களுக்கு நனவோடை உத்தி மூலம் திரை மொழி மற்றும் காட்சி மொழி வழியாக சொல்லப்பட்டிருக்கிறது.
முகுந்த் வரதராஜனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய அனுபவமிக்க நடிப்பையும், கம்பீரமான உடல் மொழியையும் அளித்து அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
இவரை விட கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாய் பல்லவி கதையை தாங்கி பிடித்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது.
உண்மையில் ஒரு இராணுவ வீரனின் வீரம் செறிந்த சுயசரிதையை அவரது மனைவியைத் தவிர வேறு எவராலும் உணர்வு பூர்வமாகவும், தேசப்பற்றுடனும் விவரிக்க இயலாது என்பதனை தனது நடிப்பால் நிரூபித்திருக்கிறார் சாய் பல்லவி.
இராணுவம் தொடர்பான அக்சன் காட்சிகளிலும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இடையேயான காதல் காட்சிகளிலும், காஷ்மீர் தொடர்பான நிலவியல் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் சாய் திறமையான தொழில்நுட்பக் கலைஞர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
அதேபோல் உணர்வு பூர்வமான காட்சிகளையும், அக்சன் காட்சிகளையும் தன்னுடைய பின்னணி இசையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஜீவி பிரகாஷ் குமார். இராணுவ வீரனின் சுயசரிதையை உணர்வுபூர்வமாக வழங்கியதற்காக படக்குழுவினரை பாராட்டலாம்.
Post a Comment