Ads (728x90)

டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடமைகளை நேற்று பிற்பகல் பொறுப்பேற்றார. 

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் என அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வருடம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழக வேந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழில் அமைச்சுக்கு இரண்டு பாரிய கட்டிடங்கள் உள்ள போதிலும் இன்னும் மக்களின் வரிசையில் குறைவில்லை எனவும், அதற்கான தீர்வுகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் பணியாளர்களை இரண்டு இலட்சமாக அதிகரிப்பது, முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான செயல் திட்டத்தை எதிர்வரும் 5 வருடங்களில் செயல்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சராக பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget