தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்னும் போராடி வருகின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலக சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவி கொடுக்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியோ அவர்களின் பங்குபற்றலுடனோ அப்பொறிமுறையைச் செயற்படுத்த முனைப்பு காட்டப்படுவதில்லை. மாறாக நாங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கும், வெளிப்படைத்தன்மையற்ற நிலையுமே காணப்படுகிறது.
எந்தப் பொறிமுறையும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்போ, விருப்போ இல்லாவிட்டால் வெற்றியளிக்காது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள எவரும் தயாரில்லை.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்ற போதும் ஒரு உண்மை தானும் கண்டறியப்படவில்லை. ஆனால் அதற்குள் நீதியை ஓரங்கட்டிவிட்டு இழப்பீட்டு அலுவலகம் திறக்க வேண்டிய தேவை என்ன? உண்மையை கண்டறியாமலே காசை எறிந்து ஏழைகளின் வாயைமூடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவா?
உண்மையிலேயே எமக்கு எமது உறவுகளின் ஆவணங்கள் உயிர்மூச்சு. ஆனால் அவர்களுக்கு அவை வெறும் காகிதம் மட்டுமே. இதுவே பாதிக்கப்பட்ட ஒரு உறவாக இருந்தால் அவருக்கு எம் வலி, தவிப்பு, அதன் பெறுமதி புரிந்திருக்கும்.
கடந்தகால அனுபவமும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் அரசாங்கம் எம்மை நடாத்திய விதமும் எம்மைச் சோர்வடையச் செய்துள்ளதோடு, மீளவும் மன அதிர்வுக்கு உள்ளாக்கியுள்ளன. அவை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஒரு போலியான பொறிமுறை என்ற முடிவுக்கு வருவதற்கு எம்மைத் தள்ளியுள்ளன.
உண்மையாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு விரும்புவார்களாயின் செயல்திறனற்ற இந்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உடனடியாகக் கலைக்கப்படவேண்டும் என்பதுடன் எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும்.
எமது உறவுகளைக் காணாமலாக்கிய இராணுவ அதிகாரிகள் தற்போதும் உயிருடனும் பதவியிலும் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விசாரிப்பதன் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். அதுவே காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.
அதை விடுத்து எம்மால் நிராகரிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு புதியவர்களை உள்வாங்க ஆட்சேர்ப்பு செய்ய முனைவதானது எம்மை தொடர்ந்து ஏமாற்றவே சகலரும் முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
மாற்றம் எனும் கோஷத்துடன் பதவி ஏறிய புதிய அரசு, பழைய சிங்கள அரசுகள் போலவேதான் தமிழ் மக்களின் மிக முக்கியமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை அணுகவுள்ளது என்பதையே இது காட்டுகின்றது.
சர்வதேச நீதி பொறிமுறையையே (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) எமது பிரச்சனைக்கான தீர்வாகும். நாம் தொடர்ச்சியாக சர்வதேச நீதியை நோக்கியே போராடி வருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment