Ads (728x90)

இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையில் வௌிப்படுத்தியுள்ளது.

உரிமை மீறல்கள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பாகுபாடு, போராட்டக்காரர்களை மௌனமாக்க முயலும் சட்டங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நடைமுறைகள் ஆகியவை இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு பங்களித்துள்ளன என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நீண்டகால மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளது.

நியாயமான பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும், பயங்கரவாதத்தடைச் சட்டத்தினைத் திருத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நடத்தப்பட்ட பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு அவர் ஆதரவளிக்கவில்லை என உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உரிமைகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

முந்தைய நிர்வாகத்தால் அடக்குமுறைச் சட்டங்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் சமூக இடத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

546 பக்கம் கொண்ட இந்த உலக அறிக்கை 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகளை மதிப்பாய்வு செய்கிறது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget