Ads (728x90)

பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழாவாக கொண்டாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு வழிபாடு செய்வார்கள். 

பொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை ‘மகரசங்கராந்தி’என்றும் அழைப்பதுண்டு. 

மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.

மருத நிலத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். வயலும், வயல் சார்ந்த இடத்தையே நாம் மருதநிலம் என்று அழைக்கிறோம். அந்த வயல் சார்ந்த பகுதியில் விளையும் பயிர்கள் செழிப்புற்று வளர தேவையான மழையைத் தருவது சூரியன். நிலத்தை உழுது பண்படுத்துவதற்கு பயன்படுபவை மாடுகள். ஆகையால்தான் இந்திரன், சூரியன், மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை மாத தொடக்கத்தில் வரும் 3 நாட்களை, தமிழர்கள் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி. அதாவது, பழமையான தீமைகளை உள்ளத்தில் இருந்து அகற்றி விட்டு, புதிய நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். இந்திரனுக்கு ‘போகி’ என்று பெயர் உண்டு. இந்திரன் செய்த குற்றத்தை மன்னித்து அவரை பூஜிக்க வேண்டும் என கிருஷ்ணர் அருளினார். எனவேதான் பொங்கலுக்கு முன்தினம் இந்திரன் பெயரால் ‘போகி பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் அன்று, சூரிய பகவானை, நாராயணராக கருதி விரத வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே சூரிய நாராயண பூஜையாகும். பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.



Post a Comment

Recent News

Recent Posts Widget