Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்-பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையமானது திருவள்ளுவர் கலாச்சார மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்து கொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின் போதுதான் அதனை அவதானித்தேன்.

திருவள்ளுவர் கலாச்சார மையம் என பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாச்சார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாச்சார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல்  திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சில வேளை தெரியாமல் சில தவறுகள் இடம்பெற்று இருக்கக்கூடும்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் கலந்துரையாடவில்லை. நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget