இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிக மோசமாக துடுப்பெடுத்தாடி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
திறமையாக துடுப்பெடுத்தாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸன்க (9), குசல் மெண்டிஸ் (2), கமிந்து மெண்டிஸ் (3), அணித் தலைவர் சரித் அசலன்க (0) ஆகிய நால்வரும் அவசரப்பட்டு விக்கெட்களை இழந்தனர்.
அவிஷ்க பெர்னாண்டோவும், ஜனித் லியனகேயும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஜனித் லியனகே 36 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 56 ஓட்டங்களையும் பெற்றனர். சமிது விக்ரமசிங்க 22 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மெட் ஹென்றி 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜேக்கப் டஃபி 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் ஸ்மித் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 26.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
வில் யங், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 75 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரச்சின் ரவிந்த்ரா 45 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் வில் யங், மார்க் செப்மன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 83 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.
வில் யங் 86 பந்துகளில் 12 பவுண்டறிகள் உட்பட 90 ஓட்டங்களுடனும் மார்க் செப்மன் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹெமில்டனில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
Post a Comment