வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால யாழில் தெரிவித்துள்ளார்.
தூய்மையான இலங்கை திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றார்.
Post a Comment