பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நேற்று கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ, பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் ஆயுதத்தை மறைத்து கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு ஆயுதம் கொண்டு வருவதற்கு சந்தேக நபர் சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு வந்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்றத்தின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை புத்தளம்-பாலாவியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..34 வயதுடைய முன்னாள் கொமாண்டோ படை சிப்பாய் மொஹமட் அஸ்மான் செரீப்டீன் எனப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment