Ads (728x90)

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன் புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். தேசிய நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை ஸ்திரப்படுத்துவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம். பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலக்கு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்துக்கமையவாக எதிர்வரும் 28 ஆம் திகதி 3 வது மீளாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்காவது தவணைத் தொகையாக 335 மில்லியன் டொலர் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மறுசீரமைப்புக்கான திட்டங்களை செயற்படுத்தி வெளிநாட்டு கையிருப்பை 6.1 பில்லியன் டொலராக ஸ்திரப்படுத்தியுள்ளோம். 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொத்த தேசிய உற்பத்தியை 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு  நாடுகளின்  முதலீடுகள் வெகுவிரைவில் கிடைக்கப்பெறும். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

காலாவாதியடைந்துள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய  அரசியலமைப்பை உருவாக்குவோம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு  அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இச்சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget