Ads (728x90)

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். சட்டத்தரணியை போன்று வேடமணிந்து துப்பாக்கிதாரி நீதிமன்றத்துக்குள் சென்றதை போன்று, ஒரு சிலர் சட்டத்தரணி என்று குறிப்பிட்டுக் கொண்டு பாராளுமன்றத்துக்குள் வந்துள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தமது தொலைக்காட்சி ஊடாக தமது நிலைப்பாட்டை உண்மை என்று மக்களுக்கு குறிப்பிட்டவர்கள் தற்போது பாராளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு எண்ணம் போல் பேசுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. இவ்வாறானவர்களின் கருத்துக்கு மக்கள் கவனம் செலுத்த போவதில்லை.

புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றது என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தம்மிக்க அமரசிங்க என்ற நபர் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க சென்றிருந்த போது நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார். பாதாளக் குழுக்களின் பழிவாங்கலுக்காகவே அந்த நபர் கொலை செய்யப்பட்டதாக அப்போது குறிப்பிடப்பட்டது.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாதாள குழுக்கள் உருவானதை போன்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். கடந்த கால அரசாங்கங்கள் பாதாள குழுக்களை போசித்தன. அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக பாதாள குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பெறுபேற்றையே இன்று நாடு எதிர்கொள்கிறது.

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 6 மணித்தியாலத்துக்குள் கைது செய்யப்பட்டார். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் மலினப்படுத்தவில்லை. ஆனால் மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget