Ads (728x90)

அரசியல் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற சுலோகத்தை தற்போது கையிலெடுத்துள்ளார்கள். கடந்த அரசாங்கங்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களை போசித்தார்கள். 

ஆனால் எமது அரசாங்கத்தில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு இல்லாதொழிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி சரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மக்களின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தில் சிறந்த திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிடும் எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.

வங்குரோத்து நிலையில் இருந்து நாடு முழுமையாக மீட்சிப் பெறவில்லை. சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் இம்முறை வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் நாட்டு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும்.

பொருளாதார ரீதியில் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. ஆகவே இம்முறை வரவு - செலவுத் திட்டம் பொருளாதாரம் மற்றும் நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல் தற்போது அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எமது அரசாங்கத்தில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு இல்லாதொழிக்கப்படும். தேசிய பாதுகாப்புக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget