ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் ”இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதன் சமகால நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை பேரவை தலைவரால் வாசிக்கப்பட்டது.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய பதில் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனநாயக முறையில் நடாத்தப்பட்ட தேர்தலின் ஊடாக நாட்டின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வலுவான ஆணையை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் மத்தியில் இன, மத, மொழி பேதங்களின் அடிப்படையில் நிலவும் பிரிவினைகளைக் களைந்து, சகலரையும் ஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பதாகத் தெரிவித்த அவர், அதற்கு சமாந்தரமாக மக்களின் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுடனும், உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களுடன் கைகோர்த்து செயற்திறனுடன் இயங்கி வருவதாகவும், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாகவும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி குறிப்பாக இறையாண்மையுடைய நாடொன்றால் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், ஆகவே தாம் அப்பொறிமுறையை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான உள்ளகப்பொறிமுறையின் இயக்கத்தை உறுதிப்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
Post a Comment