கொடிமரத்தின் தண்டை சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது உத்தமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும்.
கொடிமரம் இராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், இராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடிமரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். அடிப்பாகம் சதுரமாக இருக்கும்.
இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.
உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
Post a Comment