Ads (728x90)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வெற்றி கொண்டு இந்தியா சம்பியனானது.

முன்னதாக இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து சிரமத்திற்கு மத்தியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இன்றைய இறுதிப் போட்டியில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும், ஷுப்மான் கில்லும் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ரோஹித் ஷர்மா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சம்பியனானது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2002 இல் இலங்கையுடன் இணைச் சம்பியனான இந்தியா, 2013 இல் மீண்டும் சம்பியனாகி இருந்தது.

அத்துடன் 2000 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்த வருடம் இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget