இதேபோன்ற சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் ஊடகவியலாளர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பிய போது அவர் சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வில்லை எனக் கூறியுள்ளார்.
எனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த கருத்துக்களை தொடர்ந்து தற்போது பல உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க என்பவரின் அரசியலை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் 1977 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட பொருளாதார திட்டம் முதல் அதனுடன் தொடர்புடையதாக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள், அதேபோன்று ஜனநாயகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகள், வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் முன்னெடுக்கப்பட்ட சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கவே அவர் செயற்பட்டுள்ளார்.
முதலாளித்துவ அரசாங்கம் எப்போதும் சமூகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் நன்மைக்காக மாத்திரம் தீர்மானங்களை முன்னெடுத்த போதிலும் அப்பாவி மக்கள் சார்பில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
அதேபோன்று 2022 ஆம் ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த போது அப்போது ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம், அதானி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஆட்சி செய்த முறை பற்றி நாம் நன்கறிவோம்.
எனவே தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பட்டலந்த சித்திரவதை போன்று பல பகுதிகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்கலாம். எனவே இது போன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment