உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கலின் போது தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் போதுமான ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்களினால் கட்டுப்பணம் வைப்பிலிடப்படுகிறது.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஆலோசனைகள் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன.
336 பிரதேச சபைகளுக்கு தொகுதி அடிப்படையில் 4,872 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் பிரகாரம் 1 கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் தற்போது கோரப்படுகிறது. நாளை மறுதினம் 12 ஆம் திகதி விண்ணப்ப கோரல் நிறைவடையும்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத்தாக்கலின் போது பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு மற்றும் இளைஞர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment