Ads (728x90)

காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி – வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்துவதுடன், தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடன் 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதேபோல் இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார். உரிய ஒப்புதலுடன் வந்தவர்கள், வரும் மே 1 ஆம் தேதிக்குள் அந்த வழியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர்கள் வர ’சார்க்’விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த விசா சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசா பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை, விமானப்படை சார்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் அல்லாதவர்கள் உடனடியாக இந்தியவுக்கு திரும்ப வேண்டும் என்றும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவுறுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget