ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து முன்னாள் அரசாங்க உறுப்பினர்களில் சிலர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பி வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என்று கூறப்படும் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களின் பெயர்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ, அதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. ரணில் விக்ரமசிங்க, உதய கம்மன்பில மற்றும் நாமல் ராஜபக்ஷ போன்ற அமைச்சர்கள் கூட ஒருவர் பின் ஒருவராக கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக விசாரணைகளை நசுக்க முயற்சிப்பதைக் குறிக்கும் ஆதாரங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். எங்களுக்கு அந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தால் சூத்திரதாரிகளையும், சம்பந்தப்பட்டவர்களையும் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்க முடியும். இது தொடர்பாக பல நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
Post a Comment