Ads (728x90)

நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. ஏனைய அரசியல் கட்சிகள் சூன்யமாக்கப்பட்டுள்ளன. அரசியல் அதிகாரம் குடும்ப அலகில் இருந்தும், பரம்பரை அலகில் இருந்தும் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பல அரசியல் தரப்பினரது அழுகுரல் கேட்கிறது.

நாட்டு மக்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றார்கள் தற்போது ஆகஸ்ட், டிசெம்பர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தோல்வி மற்றும் அச்சத்தின் வெளிப்பாடே இதுவாகும். ஆகவே அரசாங்கத்துக்கு பாரியதொரு சவால் ஏதும் கிடையாது. சூன்யமாக்கப்பட்டுள்ள தரப்பினர் மாத்திரமே ஒன்றிணைந்துள்ளார்கள்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் - ஜனாதிபதி கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம். மக்களின் நம்பிக்கை என்ற பாரதூரமான பலம் எம்மிடம் உள்ளது.

வங்குரோத்து நிலையடைந்த நாட்டையும், சகல வழிகளிலும் பலவீனமடைந்த அரச நிர்வாக கட்டமைப்பையே நாங்கள் பொறுப்பேற்றோம். ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி,அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்கியுள்ளோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் தான் ஆறு மாத காலத்தில் பொருளாதார மீட்சி குறித்து கேள்வியெழுப்புகிறார்கள். பொருளாதார மீட்சிக்கான பொறுப்பை நாங்கள் மறக்கவில்லை. பிற தரப்புக்கு கையளிக்க போவதுமில்லை. நிலையான பொருளாதார மீட்சிக்கான அடித்தளமிட்டுள்ளோம்.

பொருளாதார முன்னேற்றத்துக்கான முதல்படியாக ஊழலற்ற அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளேன். தேசிய நல்லிணக்கமில்லாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

ஆகவே தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம். ஆகவே இதனை செய்யாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.  தேசிய நல்லிணக்கம் பொருளாதார மீட்சிக்கான சிறந்த வழிகோலாகும்.

அரச சேவை வினைத்திறனாக்கப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் நாட்டு மக்களுக்காக சுயாதீனமான முறையில் சேவையில் ஈடுபட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவாக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகள் ஆணைக்குழு ஒரு தரப்பினருக்கு மாத்திரமல்ல, அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன்.

குற்றமிழைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் அச்சமடைய வேண்டும். சர்வதேச மட்டத்தில் நாட்டின் இறையாண்மையை முன்னிலைப்படுத்தி நாங்கள் தற்றுணிவுடன் செயற்படுகிறோம். 

கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். ஊழலற்ற அரச நிர்வாகத்துக்கு நான் உறுதிப்பாடளிக்கிறேன்.

சிறந்த திட்டமிடலுடன் மக்களுக்காக நலன்புரி சேவைகளை முன்னெடுத்துள்ளேன். பொருளாதார ஸ்திரப்படுத்தலுடன் தான் அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே கடந்த காலங்களை போன்று செயற்பட முடியாது. 

அரச உத்தியோகத்தர்கள் யதார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தொழிற்சங்கத்தினரும் நிலைமையை அறிவார்கள். ஆகவே பிரச்சினைகள் காணப்படுமாயின் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணலாம். அனைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளேன்.

அரசியலும், சவாலும் எம்மிடமே உள்ளது. அனைத்து தரப்பிலும் சவால்கள் உள்ளன. மக்கள் காலி முகத்திடலுக்கு வந்தவுடன் கிராமத்தை கைப்பற்றுவதாக குறிப்பிட்டவர்கள், கிராமத்தை கைப்பற்றி விட்டார்களோ தெரியவில்லை. சிறந்த எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்துள்ளோம். அவற்றை அமுல்படுத்தியுள்ளோம்.  எம்மீதான நம்பிக்கையை நான் பாதுகாப்பேன். எம்முடன் கைகோருங்கள்.

ஜனாதிபதி, அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியாக காணப்படுகின்ற நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தேசிய மக்கள் சக்தியை மையப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை வெற்றிப்பெறச்செய்வோம். ஏதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குவோம் என்றார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget