இன்றைய தினம் முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னேற்ற மீளாய்வு, எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.1970 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதிலிருந்து வியட்நாமும், இலங்கையும் வலுவான மற்றும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணி வருகின்றன.
இலங்கை மற்றும் வியட்நாமின் வருடாந்த இருதரப்பு வர்த்தகம், முக்கியமாக ஏற்றுமதிகள், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை எட்டியுள்ளது. எதிர்வரும் வருடங்களில் இருதரப்பு வர்த்தகத்தை 01 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதை இரு தரப்பினரும் இலக்காகக் கொண்டுள்ளனர்.இந்த ஆண்டு வியட்நாமும் இலங்கையும் இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை பயன்படுத்தி உறவுகளை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் தயாராக உள்ளன.
Post a Comment