2025 மே மாதம் பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவுகளில் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,386.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது மே 2024 வருடத்துடன் ஒப்பிடும்போது 6.35% வருடாந்த வளர்ச்சியாகும்.
இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் செயல்திறனையும், சந்தைகளை பன்முகப்படுத்துவதற்கும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் மூலோபாய முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தையும் பிரதிபலிப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
2025 மே மாதத்தில் மாத்திரம், வணிக பொருட்கள் ஏற்றுமதி வருடத்திற்கு 1.70 சதவீதம் அதிகரித்து 1,028.52 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய, இந்த எண்ணிக்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் மற்றும் பெற்றோலிய பொருட்களிலிருந்து மதிப்பிடப்பட்ட வருமானமும் உள்ளடங்கும்.
2025 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதி 5,344.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.46 சதவீத அதிகமாகும்.
மொத்த ஏற்றுமதி வளர்ச்சியில் சேவை ஏற்றுமதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2025 மே மாதத்தில் சேவை ஏற்றுமதி வருமானம் 358.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சேவை ஏற்றுமதி 13.20 சதவீதம் அதிகரித்து 1,589.12 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
Post a Comment