Ads (728x90)

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். 

தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகதவும், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். 

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும், வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தெரிவித்தார். 

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget