Ads (728x90)

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் இலங்கை விமான சேவைகள் (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக்குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

மேற்படி விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் இலங்கை விமான சேவைகள் (தனியார்) நிறுவனம் என்பவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடைபெறாததால், இந்த நிறுவனங்கள் பாரியளவில் செயலிழந்துவிட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து துரிதமாக விசாரணையை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கவும் அவர் குழுவுக்கு அறிவித்தார்.

இந்த ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் எச்.எம். காமினி விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேலதிகச் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஞானசிறி சேனநாயக்க, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் துஷாந்த பஸ்நாயக்க, சடத்தரணி தொன் சமிந்த ஜே. அதுகோரல, அரச தொழில்முயற்சிகள் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் என்.ஏ.எச்.கே. விஜேரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget