திடீரென ரங்கராய சக்திவேல் மீது நடக்கும் கொலை முயற்சியில் அமரனை, சந்தேகிக்கிறார் சக்திவேல். இதைப் பயன்படுத்தி ரங்கராய சக்திவேலுக்கும் அமரனுக்கும் இடையே கொம்பு சீவி விடுகிறார்கள். அப்போது ஓர் உண்மை, அமரனுக்குத் தெரிய வர, சக்திவேலைக் கொல்லத் துணிகிறார்.
இதிலிருந்து தப்பிக்கும் சக்திவேல், அமரனையும் அவருடன் இருப்பவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறார். இந்த மோதலில் என்ன நடக்கிறது, யார் யாரைக் கொல்கிறார்கள் என்பதுதான் கதை.
ரங்கராய சக்திவேல் கதாபாத்திரத்தில் கமல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வயதுக்கு மீறிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
அமரன் கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராக சிம்பு தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்காக உருகுவது, இரண்டாம் பாகத்தில் கொல்லத் துடிப்பது என அவரின் நடிப்பை ரசிக்கலாம். கொடுத்த வேலையை த்ரிஷா செய்திருக்கிறார்.
கமலின் மனைவியாக அபிராமி, அண்ணனாக நாசர், மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி, பகவதி, ஜோஜூ ஜார்ஜ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.
வழக்கமான தாதா படமாகவும் இல்லாமல், மணிரத்னம், கமல் படமாகவும் அல்லாமல் எடுத்திருப்பது பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்தான்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹிட்டான, “முத்தமழை“ … “விண்வெளி நாயகா“ … பாடல்கள் படத்தில் இல்லை. பின்னணி இசை, காட்சிகளுக்கு உணர்வூட்டுகிறது.
Post a Comment