Ads (728x90)

மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் சாதக, பாதக நிலைமைகளை மீளாய்வு செய்யும் நோக்கில் ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன் அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இக்கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது. 

காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget